Monday, July 6, 2009

ஆந்திராவில் ஈழத்தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து மாணவர்கள் கருத்தரங்கம்


ஆந்திர மாநிலத் தலைநகரான ஐதராபாத் நகரில் EFLU என்ற மத்திய பல்கலைக்கழகத்தில் ஈழத்தில் இனப்படு்கொலையைத் தடுத்துநிறுத்தக்கோரியும், ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை வழங்கக் கோரியும் கருத்தரங்கம் ஒன்றை EFLU மாணவர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது. தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் APCLC மற்றும் DABMSA ஆகிய அமைப்புகள் இணைந்து 04.07.2009 சனிக்கிழமை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே உள்ள அரங்கத்தில் கருத்தரங்கை நடத்தினர்.

EFL பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவர் தோழர் இரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையோடு, சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களைப் பற்றிய ஒரு முன்னுரையையும் வழங்கினார். இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பயில்கின்றனர். ஆங்கில மொழி வளர்ச்சிக்காக இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் பணியாற்றி வருவது இப்பல்கலைக்கழகமாகும். ஆங்கிலத்திலும், உலகின் பல்வேறு மொழிகளிலும் உயர் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றனர். அரங்கு நிறைந்த அளவில் கடந்த நான்கு ஆண்டுகளில் நடந்த ஒரே நிகழ்வு இந்தக் கருத்தரங்கம் தான் என்பதை பங்கேற்ற மாணவர்கள் கூறினர்.

இக்கருத்தரங்கில் முதலில் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஈழ வரலாற்றை - இனப்படுகொலையின் தொடக்கத்திலிருந்து விரிவாக ஆங்கிலத்திலேயே பதிவு செய்தார். ஆய்வு மாணவர்கள் பலரும் அந்த உரையைக் கவனமாகக் குறிப்பெடுத்து நிகழ்ச்சியின் நிறைவில் உரை தொடர்பான தமது கேள்விகளைத் தொடுத்து பதிலைப் பெற்றனர். கழகத் தலைவரைத் தொடர்ந்து தொடர்ந்து APCLC அமைப்பின் கலைக்குழுவின் தோழர் பிரபாகர் குழுவினர் இநதியிலும், தெலுங்கிலும் எழுச்சிப் பாடல்களைப் பாடினர். அதனைத் தொடர்ந்து இந்திய அரசின் ICSSR என்ற அமைப்பின் தலைவரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான பேரா. ஜாவீத் அலம் அவர்கள் கருத்துரையாற்றினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் தோழர் வழக்கறிஞர் கேசவன், APCLC யின் திருப்பதி தோழர் சைதன்யா ஆகியோர் உரையாற்றினர். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் கருத்தரங்கில் மாற்றுக் கருத்துக்களை வைத்தவர்களுக்கு உரிய பதிலைத் தரும் வகையில் உரையாற்றினார். சிவாஜிலிங்கம் அவர்களின் உரையை பல்கலைக் கழகப் பேராசிரியர் மாதவப் பிரசாத் அவர்கள் மொழிபெயர்த்துப் பேசினார்.

ஈழத்து இனப்படுகொலை குறித்து தெளிவான கண்டனங்களைப் பதிவு செய்த இக்கருத்தரங்கு சிறப்பாக நடைபெற தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் கோவை பன்னீர்செல்வம், தோழர் பிச்சுமணி, ஐதராபாத் EFL பல்கலைக்கழக மாணவர்பேரவைத் தலைவர் தோழர் இரவிச்சந்திரன், மருந்தியல்துறை ஆராய்ச்சியாளர் கண்ணதாசன், தோழர் பூங்குழலி, மென்பொருள் வல்லுநர் ராம்குமார் ஆகியோர் சிறப்பாகப் பணியாற்றினர். நிகழ்ச்சியில் செந்தில்நாதன் என்ற தோழர் வழக்குநிதியாக 500 ருபாய் கழகத்தலைவரிடம் வழங்கினார்.

கடந்த ஜீன் மாதத்திலிருந்து ஐதராபாத் நகருக்கு சென்று ஆந்திர மாணவர்களைச் சந்தித்து இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்து பெரியார் திராவிடர் கழகத்துக்கு ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் கோவை தோழர்கள் பன்னீர் செல்வம், பிச்சுமணி ஆகியோர் ஆவார்கள்.

No comments:

Post a Comment