‘தீண்டாமை’ நிலவும் தேனீர்க் கடை, முடிதிருத்தகம், சுடுகாடுகள்
மீண்டும் பட்டியல் தயாரிக்கிறது, கழகம்
தோழர்களே, தயாராவீர்!
டிச. 31 வரை - பட்டியல் சேகரிப்பு
ஏப். 14 வரை - பரப்புரை இயக்கம்
ஏப். 14 - போராட்ட அறிவிப்பு
பெரியார் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தீயிட்ட நவம்பர் 26 அன்று சென்னையில் பெரியார் திராவிடர் கழக சார்பில் சாதி ஒழிப்பு சட்ட எரிப்பு நாள் பொதுக் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. இராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை சந்திப்பில் பெரியார் சிலை அருகே நடந்த கூட்டத்துக்கு கழகத் தோழர் டிங்கர் குமரன் தலைமை தாங்கினார். சமர்ப்பா குழுவினரின் எழுச்சி இசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின. செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். கழகத் தோழர்கள் டிங்கர் குமரன், அன்பு தனசேகரன் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச்செயலாளர்கள் விடுதலை இராசேந்திரன், கோவை இராம கிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி, கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் உரையாற்றினர். இறுதியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.
அவர் தனது உரையில் - பெரியார் சட்ட எரிப்பு நாளில் மீண்டும் சாதித் தீண்டாமை எதிர்ப்பில் பெரியார் திராவிடர் கழகம் களப் பணிகளில் இறங்கும் என அறிவித்தார்.
தமிழ்நாட்டில் கிராமங்களில் தேநீர் கடைகளில் இரட்டைக் குவளைகள் தொடருகின்றன. பொது சுடுகாடு வரவில்லை; சேரிகள் ஊருக்கு வெளியே ஒதுங்கியே நிற்கின்றன. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டால் - உள்ளூரில் உயிருக்கே பாதுகாப்பில்லை என்ற நிலை நீடிக்கிறது. இந்த நிலையில் சாதி தீண்டாமைக்கு எதிரான பரப்புரை யும், இயக்கமும் நடத்தப்படவேண்டிய அவசியம் இருப்பதை கழகத் தலைவர் சுட்டிக் காட்டினார்.
முதல் கட்டமாக இரட்டை குவளைகளை வைத்துள்ள தேனீர் கடைகள், தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுக்கும் முடிதிருத்தும் நிலையங்கள், தீண்டாமை பின்பற்றும் சுடுகாடுகள் பற்றிய விவரங்கள், கிராமம் கிராமமாக தயாரிக்கப்பட இருக்கிறது. பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 31 ஆம் தேதி வரை பட்டியல் சேகரிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
பொங்கல் முடிந்து - 2010 ஜனவரியில் தமிழகம் தழுவிய சாதி, தீண்டாமை எதிர்ப்பு பரப்புரை பயணத்தை கழகம் மேற்கொள்ளும். ஜனவரி தொடங்கி - அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14 ஆம் தேதி வரை பரப்புரைப் பயணம் நிகழும். அன்றைய நாளிலே சாதி, தீண்டாமைக்கு எதிரான நேரடி நடவடிக்கைகளில் இறங்கும் போராட்டங்கள் அறிவிக்கப்படும். இரட்டை தம்ளர் முறைகள் இருந்தால், இரட்டை தம்ளர்களை உடைப்பது; தீண்டாமைக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தை முற்றுகையிடுதல் போன்ற போராட்ட முறைகளை கழகம் பரிசீலிக்கும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
1 comment:
that is like
Post a Comment