பெரியார்முழக்கத்தில் வெளியான செய்தி...
கரிகாலன் தலைநகராகக் கொண்டு ஆண்ட களம், மணற்பரப்பில் கட்டப்பட்ட பழைமையான கல்லணையைக் கொண்ட நகரம், சமணர்களின் சிறப்புடன் வாழ்ந்த பகுதி என்றெல்லாம் பழம்பெருமைகளையும் அண்ணா பல்கலைக் கழகம், ஐ.ஐ.எம், ஐ.டி பார்க் என நவீன முகங்களையும் பன்னாட்டு நுழைவாயில்களையும் ஒருங்கே பெற்றுள்ள திருச்சி மாநகரத்தின் மற்றொரு கோர முகத்தை பெரியார் திராவிடர் கழகம் அம்பலப்படுத்துகிறது. அக்கோர முகத்தை அகற்றும் பணியையும் தொடங்கியுள்ளது. திருச்சி வேர் ஹவுஸ் கல்லறை. திருச்சியில் இன்னும் மனிதநேயமுள்ள, நாகரீக எண்ணமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்களா என்ற கேள்விக் குறியை எழுப்பியுள்ளது இக்கல்லறை.
தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சிமாநகரின் மையப்பகுதியில் மேலப்புதூர் பாலத்துக்கு கிழக்கே அமைந்துள்ளது இந்த வேர் ஹவுஸ் கல்லறை. பழையகோவில் பங்குக்கு கட்டுப்பட்ட இக்கல்லறை அமைய மறைந்த லூர்துசாமி இடம் வழங்கியுள்ளார். இக்கல்லறையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரையும் ஆதிக்கசாதியினரையும் ஒரே இடத்தில் புதைப்பதைத் தடுப்பதற்காக கல்லறைக்கு குறுக்கே மிகப்பெரிய உறுதியான தீண்டாமைச்சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
சுவருக்கு ஒருபுறம் உப்புப்பாறை, செங்குளம் காலனி, மல்லிகைபுரம், கெம்ஸ் டவுன், கூனி பஜார், காஜாப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாழும் பறையர்களும் சக்கிலியர்களும் புதைக்கப்படுகின்றனர். மறுபுறம் பழையகோயில், இருதயபுரம், எடத்தெரு ஆகிய பகுதிகளில் வாழும் அப்பகுதியின் ஆதிக்கசாதியான பிள்ளைமார்கள் புதைக்கப்படுகின்றனர். இருபகுதிகளிலும் சமாதியில் சிலுவைதான் ஊன்றப்படுகிறது. இரு பகுதியினரும் கிறிஸ்தவ மதத்தின் ரோமன் கத்தோலிக் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் தான்.
இந்து மதத்தில் தமிழர்கள் தாம் வாழும் கிராமங்களில் இன்றுவரை தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் தனித் தனிச் சுடுகாடுகளை உருவாக்கி தீண்டாமையை நிலைநிறுத்தி வருவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்து மதத்திலிருந்து மாறுபட்ட கிறிஸ்தவ மதத்தில் ஒரே மதத்தில் ஒரே பிரிவில் இந்து மதத்தின் உண்மை முகமான ஜாதி - தீண்டாமைக் கொடுமை, சுடுகாட்டிலும் தாண்டவமாடுவதை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறோம். இக்கொடுமையை பல ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் கண்டித்துள்ளார். போராடியும் உள்ளார். அப்போராட்டம் தொடரவில்லை. தீண்டாமைச் சுவரும் உடைத்தெறியப்படவில்லை. அக்கடமையை பெரியார் விட்ட இடத்திலிருந்து பெரியார் திராவிடர் கழகம் கையிலெடுத்திருக்கிறது.
கடந்த 2010 மார்ச் மாதத்தில் திருச்சி நகரம் முழுக்க 8 இடங்களில் இத்தீண்டாமைச்சுவரை அகற்றக்கோரி தொடர்பிரச்சாரக்கூட்டங்களை பெரியார்தி.க நடத்தியுள்ளது. 14.04.2010 அன்று திருச்சி மாவட்டக் காவல்துறையின் ஒரு பிரிவான தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளிடம் இந்தத் தீண்டாமைச் சுவரை அகற்றக்கோரி நேரடியாக ஒரு கோரிக்கை விண்ணப்பத்தையும் அளித்தது. ஒரு மாத காலம் நடைபெறும் “ஜாதி-தீண்டாமைக்கு எதிரான பெரியார் கொள்கைப் பரப்புரைப் பயண”த்தின் ஒரு கட்டமாக 24.04.2010 அன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தீண்டாமைச்சுவரை அகற்றும் போராட்டத்தை அறிவித்துள்ளார். அவர் தனது உரையில்,
“இந்திய விடுதலைநாளாகக் கருதப்படும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் அரசே தலையிட்டு திருச்சி வேர்ஹவுஸ் கல்லறையில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும். இதற்காகவே - இது போன்ற தீண்டாமைக் கொடுமைகளைக் களைவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அத்தீண்டாமைச் சுவரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து அகற்ற வேண்டும். அப்படி அரசும் தீண்டாமை ஒழிப்புப்பிரிவும் தமது கடமையைச் செய்யாவிட்டால் பெரியார் திராவிடர் கழகம் தனது கடமையைச் செய்யும். முதல் கட்டமாக ஆகஸ்ட் 15 அன்று திருச்சி மாவட்ட தீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகம் இழுத்துப் பூட்டப்படும் , அச்சுவர் அகற்றப்படும்வரை தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும்” என அறிவித்தார்.
1 comment:
Good job which is being done by Periyar Dravidar Kazhagam. Let us all join to eradicate the caste system in Tamil Nation as told by our mentor Periyar.
yours,
Dr.S.Ramakrishnan
Puducherry
Post a Comment